சென்னை தினம்- முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? சென்னை – ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’! #ChennaiDay #Chennai384” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயர்கள் உருவாக்கிய #Madras-ஐ சென்னை என பெயர் மாற்றி அதன் கட்டமைப்பை செதுக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். சிங்கார சென்னை, சிங்கார சென்னை 2.O திட்டங்களின் மூலமாக சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னையை உருவாக்கி வருகிறார் நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அடுத்தடுத்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்தி, நம் மாநகரின் புகழை உலகெங்கும் கொண்டுசேர்க்கும் பணியை நாம் மேற்கொண்டு வருகிறோம். புயல் – மழை – வெள்ளம் என எத்தனை பேரிடர்களை சந்தித்தாலும், உடனே மீண்டு வந்து வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கும் – அதன் மக்களுக்கும் 384-ஆவது #ChennaiDay வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.