நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப்பழக்கத்தை மட்டுப்படுத்தவும் “அரசு – அரசு இயந்திரம் – பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தத்தை நடத்தவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டம்னறத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் பின்வருமாறு,
தீர்மானம் 1:
தொடர்ந்து நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களில் நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ‘டார்ச் லைட்’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென தெரிவித்த ஏகோபித்த கருத்தின்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். தற்போது ‘டார்ச் லைட்’ சின்னத்தையே தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ளது.
உரிய தருணத்தில் சிறப்பாகச் செயல்பட்டு ‘டார்ச் சின்னம்’ கிடைக்கப்பெற காரணமாக இருந்த நமது தலைவர் அவர்களுக்கும், அவரது வழிகாட்டுதல்படி செயலாற்றிய நமது நிர்வாகிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2:
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் எதிர்கொண்டு பிரமாண்டமான வெற்றியை உறுதிசெய்யும் பொருட்டு நமது தலைவர் அவர்கள் தேர்தல் பணிக்குழுவை உருவாக்கியுள்ளார்கள். அதன்படி, கீழ்க்காணும் நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறுகிறார்கள்.
உறுப்பினர்கள்:
- திரு. ஆ. அருணாச்சலம் – பொதுச் செயலாளர்.
- திரு. தங்கவேலு – துணைத் தலைவர்.
- திரு. மெளரியா – துணைத் தலைவர்.
- திரு. சந்திரசேகர் – பொருளாளர்.
- திரு. தட்சணாமூர்த்தி – மாநிலச் செயலாளர்.
மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் பணிக்குழுவிற்குச் சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3:
வருகிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் விருப்பமனு செய்யலாம். விருப்ப மனு கட்டணமாக ரூ.50,000/- நிர்ணயிக்கப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு அறிவிக்கிறது.
தீர்மானம் 4:
நமது கட்சி துவங்கப்பட்ட தினம் மற்றும் உலக தாய்மொழிகள் தினம் ஆகிய சிறப்புகளைக் கொண்ட பிப்ரவரி 21-ஆம் தேதி, நமது தலைவர் அவர்கள் மதுரை நகரில் ‘Remembering Babuji’ எனும் பெயரில் பிரமாண்டமான கூடுகைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து வருகை தரும் ஆகச்சிறந்த அறிஞர்கள், அரசியல் தலைவர்களுடன் நமது தலைவர் கலந்துரையாடல் நிகழ்த்தவிருக்கிறார்.
இன்றைய உலகிற்கு, இன்றைய இந்தியாவிற்கு, இன்றைய வாழ்விற்கு காந்தியின் தேவை என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் பிரமாண்டமான நிகழ்வினை முன்னெடுத்துள்ள நமது தலைவர் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 5:
நமது தலைவர் அவர்கள் முன்னெடுக்கிற ‘Remembering Babuji’ எனும் பெருநிகழ்வு சிறப்பாக நிகழ்ந்தேற தலைவர் அவர்களால் விழாக்குழு அமைக்கப்பட்டு, அதன் விபரங்கள் வருகிற திங்கள்கிழமை அறிவிக்கப்படும்.
மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ‘Remembering Babuji’ விழாக்குழுவிற்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6:
குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதோடு, கிராமசபையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்து அதிகளவில் மக்களையும் பங்குபெறச் செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7:
மாநில சுயாட்சி என்பது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை. அதில் தலையிடுவதும் இடையூறு விளைவிப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. நியமன பதவி வகிக்கிற மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொள்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. அவர் தனது பதவியின் மாண்புக்கேற்பவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் செயல்பட வேண்டுமென தமிழ்நாடு ஆளுநரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் ஏற்புடையவை அல்ல. நிதி ஒதுக்கீட்டில் ஏற்கனவே வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு 40% நிதிப்பங்களிப்பை ஏற்கவேண்டும் என்பது அநீதி. இத்திட்டத்தின் பயனாளிகளான ஆதிதிராவிட பழங்குடி மக்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கண்டிக்கிறது.
தீர்மானம் 9:
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களையும் வழங்கக் கூடிய “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்த ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
அதே வேளையில், ஓய்வு பெற்ற மூத்த அரசு மருத்துவர்கள் தங்களது ஓய்வூதிய பலன்களுக்காக 2009 முதல் வலியுறுத்தி வருகிறார்கள். 2018-ல் ஏற்கப்பட்ட அவர்களது கோரிக்கைகள் அடுத்த ஆறே மாதங்களில் நிறுத்தப்பட்டன. நீண்ட காலமாக மக்களுக்குச் சேவையாற்றி பணி நிறைவு பெற்ற மூத்த மருத்துவர்களின் கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தாயுள்ளத்தோடு பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றும்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கோரிக்கை விடுக்கிறது.
தீர்மானம் 10:
இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ என்கிற மகத்தான திட்டத்தை ஆசியாவிலேயே முதன்முறையாகப் பேசியவர் நமது தலைவர். எத்தனையோ கேலி கிண்டல்கள் விமர்சனங்கள் எழுந்தபோதும் சமூகப்பொருளியலில் பெரும்பங்கு ஆற்றும் நமது மகளிருக்கான அடிப்படை உரிமை இது என்று நமது தலைவர் தொடர்ந்து முழங்கினார். நமது தலைவரின் மகத்தான சிந்தனையில் உதித்த திட்டம் தமிழ்நாட்டில் திமுக அரசால் ‘மகளிர் உரிமைத்தொகை’ என உருவெடுத்தது. இன்றைக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் மகளிர் மாதாந்திர உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு வெளியிலும் இதை நடைமுறைப்படுத்த அரசுகள் சிந்தித்து வருகின்றன. இந்தப் பெருமைக்கெல்லாம் நமது தலைவர்தான் காரணம் என்பதை இந்தியப் பெண்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை பன்மடங்கு உயர்த்தி, இந்தியாவிலேயே மிக அதிகமான தொகை வழங்கும் மாநிலம் எனும் பெருமையை தமிழ்நாடு அடையவேண்டும் என தமிழ்நாடு அரசை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 11:
தெளிவான சிந்தனையும், வலுவான உடலும் கொண்ட இளையோர்தான் ஓர் ஆரோக்யமான சமுதாயத்தின் அடையாளங்கள். நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப்பழக்கத்தை மட்டுப்படுத்தவும் “அரசு – அரசு இயந்திரம் – பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தத்தை நடத்தவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வல அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளை உள்ளடக்கிய வலுவான கமிட்டி அமைக்கப்பட்ட வேண்டும். இந்தக் கமிட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் நேரடி மேற்பார்வையில் செயல்பட வேண்டும்.
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை, போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு பொதுமக்கள் புகாரளிக்கவும், அந்தப் புகார் மீது அடுத்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும், போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், புழக்கத்தில் விடுபவர்கள் மற்றும் பயன்படுத்துகிறவர்கள் மீது சட்டரீதியான கடுமையான தண்டனைகளை விதிக்கவும், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் செய்கிற ஓர் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கமிட்டியாக இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12:
மதரீதியாக, ஜாதி ரீதியாக மக்களைப் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வருகை தரும்போதெல்லாம் தமிழை நேசிப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், பிற மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ் மக்களைத் திருடர்கள் என்றும் கொடுங்கோலர்கள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் கேவலமாகப் பேசுபவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேடைகளில் தமிழில் ஒரிரு வார்த்தைகள் பேசுவதும், ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிகக்குறைந்த நிதியே ஒதுக்குவதும், தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் அகழ்வாய்வு அறிக்கைகளை முடக்குவதையும், மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் ஹிந்தியைத் திணிப்பதையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கண்டிக்கிறது.
ஆதவ் மாமியார் வச்ச ஆப்பு! விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா கையில் ஆதாரம்! உமாபதி நேர்காணல்!


