குமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு- இருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கபட்ட விவகாரத்தில் 3 நாட்களாக பதற்றம் நிலவி வந்தநிலையில் சிலையை உடைத்த 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே வட்டவிளையில் தோட்டத்துமடம் ஸ்ரீகிருஷ்ண சாமி கோயில் குளம் அருகே 2007ஆம் ஆண்டு ஆலய நிர்வாகம் சார்பில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கபட்டு சத்ரபதி சிவாஜி பிறந்ததினம் ,சுதந்திரதினம் ,குடியரசு தினம் ஆகிய முக்கியதினங்களில் இந்து அமைப்பினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி மர்மநபர்களால் சிலை உடைக்கபட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் இந்து அமைப்பினர் குவிந்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். இதையடுத்து சிலையை உடைத்தவர்கள் குறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல்வேட்டை தீவிரப்படுத்திய நிலையில், சிலையை உடைத்த குற்றவாளிகளான மேல்புறம் பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ் மற்றும் பண்டாரவிளையை சேர்ந்த பிரதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதுபோதையில் சிலையை உடைத்ததாக முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒப்புகொண்டுள்ளனர். இது குறித்து இந்த சம்பவத்தில் வேறு தோடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.