கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), என்பவர் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு, சென்னைக்கு ரயிலில் திரும்பியுள்ளார். அப்போது அவர் தனது தோழிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பர்கர் சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை வந்தபோது எலினா லாரெட்டுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதால், அவர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார்.


பின்னர் பெரவள்ளூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற, எலினா லாரெட் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, எலினா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் எலினாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சிக்கன் ரைஸ் சாப்பிட்டதே அவரது இறப்புக்கு காரணம் என புகார் எழுந்தது.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விளையாட்டின் போது எலினாவுக்கு வயிற்று மற்றும் மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது.இதனால், அவரது நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்துள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வயிற்றில் வலி ஏற்பட்டதால் உடல் உபாதைப் பிரச்னை எனக்கருதி எலினா சிகிச்சை மேற்கொண்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக வெளியான பின்னரே எலினாவின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.


