பொள்ளாச்சி அருகே குடியிருப்பு மற்றும் விவசாய தோட்ட பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்பிச்சி புதூர் மேட்டுப்பதி பகுதியில் கடந்த சில தினங்களாகவே சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த விவசாயி நிஷாந்த் என்பவர் தோட்டத்தின் அருகே சிறுத்தை ஒன்று நடந்து செல்வதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து விவசாயிகள் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனா். அந்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்கள், வேட்டை தடுப்பு காவலர்களுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



