‘மோடி திருடன்’ பட்டுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
பாஜக மோடி அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்து முன் விழுந்து சாலை மறியலில் ஈடுபட்டு திருடன் மோடி என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து எம்.பி. பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு தண்டனைதரும் அளவுக்கு பொய் வழக்கு புனைந்த ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும், பொய் வழக்கு போட்ட மோடி ஒழிக என கண்டன கோஷங்களை எழுப்பி வந்தனர்.
மோடி திருடன்!
பட்டுக்கோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் pic.twitter.com/H5JbGZaPcg— Sonia Arunkumar (@rajakumaari) March 25, 2023
அப்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த வழியாகவந்த அரசு பேருந்து முன்பு திடீரென விழுந்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன் திருடன் மோடி என தொடர்ந்து முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சாலையைவிட்டு எழுந்திருக்க சொல்லி கூறினர். ஆனால் அவர்கள் மறுக்கவே அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சாலையை விட்டு அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்த இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.