spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்... திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல்...

100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்… திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்… நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

-

- Advertisement -

அரசியல் புரட்சியின், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திமுக என்றாலே கசக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய “தீரர்கள் கோட்டம் தி.மு.க”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்” மற்றும்  “முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்” ஆகிய மூன்று நூல்களின் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் “தீரர்கள் கோட்டம் தி.மு.க”, “திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்” ஆகிய 2 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, “முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்” நூலை ஆசிரியர் கி.வீரமணி வெளியிட ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் புரட்சியின் அடையாளமாக, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக திராவிட இயக்கம் இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திராவிடம் என்றாலும், திராவிட இயக்கம் என்றாலும், திமுக என்றாலும் கசக்கிறது, எரிகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மேலெழுந்து வருவதைப் பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு வன்மம் வெளிவருகிறது. வரலாற்றைத் திரும்பி பார்த்தால் விமர்சனம் என்கிற பெயரில் அவ்வளவு அவதூறுகள், காழ்ப்புணர்வுகள். அந்தக் காலத்தில் நீதிக்கட்சியை குழிதோண்டி புதைப்பேன் என்று ஒருவர் கூறினார். இன்று என்ன நிலை? 100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக தமிழ்நாடு மக்களின் ஆதரவுடன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் திராவிட மாடல் என்றுக் கூறும் போதெல்லாம் அவர்களுக்கு திரும்ப திரும்ப எரிகிறது. அவர்களுக்கு திரும்ப திரும்ப எரிகிறது என்றால் நாம் மீண்டும் மீண்டும் திராவிட மாடல் என்று கூறலாம்.

நூறாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு எப்படி இருந்தது; இன்றைக்கு எப்படி இருக்கின்றது? இதே காலகட்டத்தில், நாட்டின் பிற மாநிலங்கள் அடைந்திருக்கின்ற சமூக வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி உட்கட்டமைப்பு வளர்ச்சி என்ன? மற்ற எல்லோரையும் விட, அனைத்து வகையிலும் நாம் இருபது ஆண்டுகள் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். கண்கூடாக தெரிகின்ற இந்த உண்மைகளை கூட மறைக்கலாம் என்று நினைத்து, சிலர் என்ன கேட்கிறார்கள்? திராவிடம்
என்ன செய்தது?, திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்கிறார்கள் அவர்களுக்கெல்லாம், பதில் சொல்லுகின்ற வகையில், இந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார் திருமாவேலன். அண்ணா உருவாக்கி, அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞர் அவர்கள் வழி நடத்திய இயக்கம் இந்த இயக்கம், பவளவிழா கண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் நான் தலைவர் பொறுப்பில் இருக்கிறேன். வெள்ளிவிழா பொன்விழா பவளவிழா என்று தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற திமுக, நிச்சயம் நூற்றாண்டு விழா காலத்திலும், ஆட்சிப் பொறுப்பிலிருந்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். அதற்கான வலிமை, கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு இருக்கிறது.

கடுமையான எதிர்ப்புகளை எல்லாம் வென்று, நெருப்பாற்றில் நீந்தி, அண்ணாவின் தம்பிகளாக, கலைஞரின் உடன்பிறப்புகளாக, சுட்டுக்கோப்பாக இருக்கின்ற இந்த இயக்கத்தை, “தீரர்கள் கோட்டம்” என்று சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வது? உழைப்பை மட்டுமல்ல; உயிரையே கொடுத்தவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், இந்த இயக்கம். அந்த தியாக வரலாற்றை, கண்ணீர் வரவழைக்கக்கூடிய அந்த தியாகிகளின் வரலாற்றை, இன்றைய இளைய தலைமுறையினர் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். தி.மு.க என்றால், என்னவென்று வரலாற்றை திரும்பி பார்த்தீர்கள் என்றால், போராட்டம்.. போராட்டம்.. போராட்டம்.. சிறை.. சிறை.. சிறை.. தியாகம்.. தியாகம்.. தியாகம்.. இதுதான் தி.மு.க.இந்தித் திணிப்புக்கு எதிரான போர்க்களம் எல்லை மீட்பு போர்க்களம் எமெர்ஜன்சி கொடுமைகள் எதேச்சாதிகார அடக்குமுறைகள் என்று நம்முடைய மண் மொழி மானம் காக்க தி.மு.க. எதிர்கொண்ட வலிகள் மிகவும் பெரியது. அத்தனையும் கடந்து, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பதற்கு காரணம், தொண்டர்கள் தான்.

அரசியலில், பலரும் சொகுசை எதிர்பார்த்து வருவார்கள்… ஆனால், தி.மு.க.வுக்கு அந்த சொகுசு கிடையாது! சில இயக்கங்களைப் பார்த்தீர்கள் என்றால், சிறிய எஃப்.ஐ.ஆர். பதிவானாலே, கட்சிவிட்டு கட்சி தாவுவார்கள். ஆனால், கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு, அவதூறுகளையும் காலந்தோறும் உருவாகின்ற அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் எதிர்கொண்டு, நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் சூரியனைப் போல, நிரந்தரமான ஒளியை வழங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இதைத்தான் ‘திராவிட அரசியல் – திராவிட அரசு இயல்’ புத்தகம் சொல்கின்றது. தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு பெயர் -தமிழுக்கு, செம்மொழி தகுதி சமூகநீதி கருத்தியலை காப்பது திட்டங்களால் சாத்தியப்படுத்துவது தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏராளமான கல்வி நிலையங்களை உருவாக்குவது என்று சொல்லித் தீராத சாதனைகளுக்கு சொந்தமான இயக்கம், நம்முடைய இயக்கம்! நீதிக்கட்சி காலத்திலிருந்து, அதன் நீட்சியான நம்முடைய திராவிட மாடல் அரசு வரைக்குமான சாதனைகளின் வரலாற்றுக் கருவூலமாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்!

இந்தப் புத்தகத்தை, ஆசிரியர் அவர்கள் வெளியிட, நம்முடைய திராவிட ஆழ்வார் பெற்றுக் கொண்டுள்ளார். இதையும் திருமாவேலன் காரணத்தோடு தான் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். இது எல்லோருக்குமான ஆட்சி என்று காட்ட இப்படி செய்திருப்பார் என்று நினைக்கிறேன். கடந்த வாரம், விமான நிலையத்திற்கு எதிரே உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். அடுத்த சில நாட்களில் மனிதநேய மகத்துவத்தை சொல்கின்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றேன். மறுநாள், திருநெல்வேலி மாவட்ட அரசு விழாவில், நெல்லையப்பர் திருக்கோயில், வெள்ளித்தேர் வரும் ஜனவரியில் மீண்டும் ஓடும் என்று அறிவித்தேன்! இதுதான் திராவிட மாடல்! இதனால்தான் நம்மை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்.

மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள், ஜனவரியில் நான் தொடங்கி வைக்க இருக்கின்ற சென்னை புத்தகக் கண்காட்சி, அண்மையில், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடத்திய அறிவுத்திருவிழா, இது எல்லாமே ஆழ்ந்த வாசிப்பை நோக்கி இளைஞர்களை நகர்த்துகின்ற முயற்சிகள்தான். நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியாது! இங்கே அறிவுத்தீ அணையாமல் இருப்பதால்தான் நம்முடைய ஊரில், கலவரத்தீயை பற்ற வைக்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது! அதை உணர்ந்து, காலத்திற்கேற்ற கருத்து ஆயுதங்களை கூர்தீட்டிக் கொடுக்கக்கூடிய திருமாவேலன் அவர்களை மீண்டும் பாராட்டி, திராவிடம் எனும் அறிவொளி இயக்கத்தால் நிமிர்ந்த தமிழ்நாடு ஒருநாளும் தலைகுனியாது! பாசிசவாதிகளின் பகல்கனவு இங்கு பலிக்காது! வரலாற்றைப் படிப்போம்! தொடர்ந்து வரலாறு படைப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ