கோவை சரக டிஐஜி தற்கொலை- அண்ணாமலை இரங்கல்
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இ.கா.ப., தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை உயரதிகாரிகள், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை சரக டிஐஜி திரு. விஜயகுமார் IPS அவர்கள் அகால மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். அவரின் அகால மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டுமென காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


