பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
கடலூர் மாவட்டம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமதி.மல்லிகா, க/பெ. பூபாலன் (வயது60) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.சுமதி க/பெ.ஐயனார் (வயது 45), திருமதி.பிருந்தாதேவி, க/பெ.இளங்கோவன் (வயது 35), செல்வி.லட்சுமி, த/பெ.செல்வம் (வயது 24), செல்வி.செவ்வந்தி, த/பெ.செல்வம் (வயது19), மற்றும் செல்வி.அம்பிகா, த/பெ.இராஜேந்திரன் (வயது18), ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.