குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உட்பட துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.


தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. சென்னை தலைமைச் செயலகம் அருகே சத்யா நகரில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் தொடங்கியுள்ளது. அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும், இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்கள் 2.19 கோடி பயனாளர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை, ரூ.2,429 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பரிசுத்தொகுப்பினை பெற ஏதுவாக தேதி குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள தேதிகளில் வந்து பரிசு தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தரமான பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
