நேற்று இரவு முதல் தலைநகரம் சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக மற்றும் தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக அரசு மற்றும் பொது நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு வெகு குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால் மாற்றுப் பாதையில் பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் ஒரு சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. முக்கியமாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் பெருமளவு குவிந்த வாகனங்களால் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓயாத மழையிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. சென்னை மாநகரை தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களோடு குறிப்பாக மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களோடு இணைக்கும் பிரதான சாலையாக ஜிஎஸ்டி சாலை (NH 45) உள்ளது. எனவே சென்னையிலிருந்து வெளியேறும் மக்களால் பேருந்து மற்றும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொடர் கனமழையால் சூரிய வெளிச்சம் இல்லாமல் சென்னை முழுவதும் பனி போர்த்தியது போல காணப்படுகிறது. பட்டப் பகலிலேயே வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்த வண்ணம் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்ற காட்சியையும் காணப்படுகிறது.