செந்தில் பாலாஜி கைதால் முதல்வர் ஏன் பதறுகிறார்?- எடப்பாடி
பழனிசாமி
அ.தி.மு.க.வைப் போல் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவர்கள் அல்ல தி.மு.க.காரர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீடியோ வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில், “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றம் அடைவது ஏன்? உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி ஏதாவது கூறிவிட்டால் தன் ஆட்சி பறிபோய் விடும் என முதலவர் அச்சப்படுகிறார்.
நேற்று (15.06 2023) மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி @EPSTamilNadu அவர்கள் காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை pic.twitter.com/TeiRh9a9aD
— AIADMK (@AIADMKOfficial) June 16, 2023
2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. எல்லா வகையிலும் பணம் என்பதே திமுகவின் குறிக்கோளாக உள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்ய விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றம் அடைவது ஏன்? அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக முதல்வர் பேசி வருகிறார்.
தமிழகம் முழுவதும் முறைகேடாக பார்கள் நடத்தி சம்பாதித்து செந்தில் பாலாஜி முறைகேடு செய்துள்ளார். திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்தான் வளர்ச்சி பெற்றுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் டெண்டர் விடப்படாமல் முறைக்கேடாக நடக்கின்றன. அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் முகாமிட்டிருப்பது தங்களை காப்பாற்றிக் கொள்ளதான். தமிழகத்தில் 30 ஆயிரம் கோடிக்கு மேல் திமுகவினர் சுரண்டியுள்ளனர். அதிமுகவினரை போல் வழக்குகளை திமுகவினர் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். நீதிமன்றம் மூலம் நிரபராதி என நிரூபித்து திமுகவினர் வெளியே வரவேண்டும். திமுகவின் முறைகேடுகளுக்கு கூட்டணி கட்சிகள் துணை போக வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்.