அ.தி.மு.க-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையவுள்ளதாகக் கூறப்படும் கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ-வின் முடிவுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “கோயில் திருவிழாக்களில் பிள்ளை பிடிப்பது போல, த.வெ.க அரசு தற்போது ஜனநாயகத் திருவிழாவில் ஆள் பிடிக்கும் வேலையைச் செய்கிறது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, “அண்ணா தி.மு.க-விலிருந்து விலகியதால் இனி ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணிலே விஜயபாஸ்கர் வாழ்வாரா? த.வெ.க-வில் சேர்வதால் அவருக்கு இனிமேல் இந்த மண்ணிலே சாவே கிடையாதா? எல்லோருக்கும் பிறப்பும், இறப்பும் ஒருமுறைதான். நமக்குக் கிடைத்த ஓர் உயிரை நம்மை வாழவைத்த கழகத்திற்காக வாழ்ந்து காட்டினால் அது வரலாறு; இல்லையென்றால் அது தகராறு. இப்போது கரூர் விஜயபாஸ்கர் அந்தத் தகராறை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.”

மகுடிக்கு மயங்கும் எம்.எல்.ஏ-க்கள் – 6-வது விக்கெட்!
இன்றைக்குத் த.வெ.க தலைவர் விஜய் ஊதகின்ற மகுடிக்குத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே மயங்கி கிடக்கிறார்கள் என யாரும் நினைத்துவிட வேண்டாம் என்று குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வை எதிர்த்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து மயங்கி வருவதாகக் கூறினார். அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று, தற்போது விஜய் ஊதும் மகுடிக்கு மயங்கிப் போன ஆறாவது சட்டமன்ற உறுப்பினர் கரூர் விஜயபாஸ்கர் ஆவார். இந்த ஜனநாயகக் கேலிக்கூத்து எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை என்று அவர் சாடினார்.
பிள்ளை பிடிக்கும் கூட்டமா? – ஆள் பிடிக்கும் அரசியல்!
”கொஞ்சமும் கூச்சமும் அச்சமும் இல்லாமல் அரங்கேறி வரும் இந்த அரசியல் அலங்கோலத்தைத் தட்டிக் கேட்பதற்கு, தற்போதைக்குத் தமிழ் சமுதாயத்திற்குத் துணிச்சல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இனி இப்படியேதான் காலம் போகும் என்று விஜய் நினைத்தால் அது தவறு. விரைவிலேயே தமிழ் சமுதாயம் உங்களுக்குத் துணிச்சலான சாட்டையடி பதிலைத் தரும்” என்று எச்சரித்தார். மேலும், “ஜனநாயகத் திருவிழாவிலே அடுத்தடுத்து ஆள் பிடிக்கிற வேலையைச் சளைக்காமல் செய்து வருகிறார் விஜய். கோயில் திருவிழாவிலே பிள்ளை பிடிக்கிறவர்களுக்கும், ஜனநாயகத் திருவிழாவிலே ஆள் பிடிக்கிறவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதுதான் இப்போது நாட்டு மக்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது” என்றார்.
12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? – ஆர்.பி.உதயகுமார் கணிப்பு
த.வெ.க அரசுக்குத் நாடாளுமன்ற/சட்டமன்ற ரீதியாகப் பெரும்பான்மை பலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மொத்தமாக 12 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதுவரை இந்த அரசியல் அலங்கோலங்கள் தமிழ்நாட்டிலே தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
”காற்று திசை மாறும், ஆணவம் அழிவைத் தரும்”
”என்ன செய்வது, இப்போது காற்று த.வெ.க பக்கம் வீசுகிறது. அதனால் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்’ என்ற பழமொழியைப் பலரும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் காற்று எப்போதும் ஒரே பக்கம் வீசாது, விரைவில் திசை மாறும். அப்படி காற்று திசை மாறுகிறபோது ஜனநாயகத்தின் உண்மையான வலிமை என்னவென்று விஜய்க்குப் புரியும்.”
இறுதியாக, “இந்த ஜனநாயகக் கேலிகூத்தை நடத்துகிற ஆணவம் நிச்சயம் அழிவைத் தரும். கரூர் விஜயபாஸ்கர் அவர்களே, நீங்கள் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டாமா? நீங்கள் செய்தது நியாயமா, தர்மமா?” என்று கேட்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை என ஆர்.பி. உதயகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து த.வெ.க நோக்கிப் பயணிப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அ.தி.மு.க முகாமில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!
