உடல்நலக் குறைவு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் தெரிவித்திருக்கிறார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இளங்கோவன் அவர்கள் ஈரோடு வெற்றிக்கு பிறகு டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்தித்து விட்டு 4:30 மணியளவில் சென்னை திரும்பினார். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவல் அறிந்து நாங்கள் அவரைக் காண வந்தபோது, அவர் மிகவும் நன்றாக இருப்பதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்பி விடுவார் என மருத்துவர்கள் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் உடல் நலம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இந்த நேரத்தில் எதற்கு என்னை சந்திக்க வந்து உள்ளீர்கள். உங்களோட உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று நிர்வாகிகளிடம் அவர் கூறினார்”என சிவராமன் தெரிவித்தார்