சிறப்பு பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி ரூ. 2.30 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். போலி சாமியாரான இவர் அருள் வாக்கு கூறுகிறேன் என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் ஆசைவாரத்தை கூறி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தன்னிடம் வரும் நபர்களிடம் தன்னிடம் பணத்தைக் கொடுத்தால், சிறப்பு பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அருள்வாக்கு கேட்க வரும் பலரும் இவரது ஆசை வார்த்தையில் ஏமாந்து பல லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து ஏமார்ந்து போயுள்ளனர்.
அவர்களில் தூத்துக்குடி ஏரல் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் ஆகியோர் போலி சாமியார் பாலசுப்பிரமணியத்திடம் சுமார் ரூ. 77 லட்சத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகன் அய்யாதுரை ஆகிய இருவரும் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளனர்.
இதேபோன்று பாலசுப்ரமணியமும், அவரது குடும்பத்தினரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், மாரிமுத்து, இருளப்பன் ஆகியோரிடம் சுமார் ரூ. 44 லட்சமும், எட்டயபுரத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு என்பவரிடம் ரூ. 5 லட்சமும், சாந்தி என்பவரிடம் ரூ.17 லட்சமும், திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகன், கமலக்கண்ணனிடம், திருமலைசாமி ஆகியோரிடம் சுமார் ரூ. 90 லட்சமும் என சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜானிடம், இதுகுறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி சாமியார் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் ஐயாதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.