சேலம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் அமைந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை அரங்கத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைப்பார்த்த அங்கிருந்த நோயாளிகள் மிகுந்த அச்சத்துடன்அளறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

உடனடியாக துரிதமாக செயல்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில் அறுவை சிகிச்சை அரங்க்கத்தில் இருவ்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக புகை வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தகவலறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுனர்.
முதல் மாடியில் இருந்த அனைத்து நோயாளிகளையும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இருப்பினும் நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. தீ முழுதும் அணைக்கப்பட்டாலும் மருத்துவமனை முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.