சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ120 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாகி வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவ்வப்போது மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வரும் தங்கம், இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பவே ஆபரணத்தங்கம் விலையும் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது.
நேற்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,400 என்கிற புதிய உச்சத்தை தொட்டிருந்தது. கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு மேலும் ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் 91,080 ரூபாய் என்கிற புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 11,385க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,480 ஏற்றம் கண்டது நகைப்பிரியர்களை கலக்கமடையச் செய்தது.

அதேபோல் நேற்று காலை வெள்ளி விலை மாற்றமின்றி ரூ. 167க்கு விற்பனையான நிலையில் பிற்பகலில் கிராமுக்கு 3 ரூபாய் ஏற்றம் கண்டு ஒரு கிராம் ரூ. 170க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 1,70,000க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 91,200க்கும், ஒரு கிராம் ரூ. 11,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து , சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராம் ரூ.171க்கு விற்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 60,000க்கு விற்பனையான நிலையில், 10 மாதங்களில் மட்டும் ரூ.31,000 ஏற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.