தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பங்குச்சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷ்யா -உக்ரைன் போர், இஸ்ரேல் – பாலஸ்தீன போர் மற்றும் ஈராக் போர் என தொடர்ந்து உலக அளவில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. ஒவ்வொரு வருட அக்ஷய திருதியைக்கும் சவரனுக்கு ரூ.5000 முதல் ரூ.7000 வரை உயர்கிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் 2030ம் ஆண்டுக்குள் தங்கம் விலை சவரன் ரூ. 1 லட்சத்தை தொட்டுவிடும் என நகை வியாபாரிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் மே மாதம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தில் மூதலீடு செய்ய பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், தங்கத்தின் விலையேற்றம் நகைப்பிரியர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் நேற்றைய தினம் ( மே-15) தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53 ஆயிரத்து 800க்கு விற்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. மே 16 ( இன்று) காலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6795க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் 1 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 92 .50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பக்கம் தங்கம் விலை லட்சத்தை நோக்கியும், வெள்ளி விலை சதத்தை நோக்கியும் சென்றுகொண்டிருக்கிறது. இது நடுத்தரவர்கத்தினரிடையே கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதேநேரம் தங்கம் நம்பகமான முதலீடாகவும், சிறந்த சேமிப்பாகவும் இருக்கும் என்கிற எண்ணமும் அதிகரித்துள்ளது.