“என்னை கருணை கொலை செஞ்சிருங்க”- மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு
கருணை கொலை செய்யக்கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 70 வயது மூதாட்டி மனு அளித்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த வீராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் பொன்னுசாமி செல்லம்மாள்(70). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவர் பொன்னுசாமி இறந்த நிலையில், செல்லம்மாள் தனது மகன் சரவணன், மருமகள் சாந்தகுமாரி உடன் வசித்து வருகிறார். இரண்டு ஆண்டு காலமாக செல்லமாலை மகன் சரவணன் மற்றும் மருமகள் சாந்தகுமாரி ஆகியோர் சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்ததுள்ளார்.
இந்நிலையில் தற்போது தன்னை கருணை கொலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்துள்ளார். 70 வயதான என்னை என் மகன், மருமகள் வீட்டை விட்டு வெளியே தள்ளி அடிக்கின்றனர. எனது வீடு, நான் சம்பாதித்தது, என் சொத்து அனைத்தையும் ஏமாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதி வாங்கிக்கொண்டு என்னை தற்போது நடுரோட்டில் விட்டு விட்டனர். நான் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்து விட்டேன், மாவட்ட ஆட்சியர் உடனே எனக்கு உண்டான சொத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என 70 வயதான மூதாட்டி செல்லம்மாள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதன்பின் அதிகாரிகள் செல்லம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.