சட்டமன்றக் கூட்டத்தொடர்: H1N1 பன்றிக்காய்ச்சல் பரவல் குறித்து பேரவையில் தீவிர விவாதம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் தினமும் பல்வேறு அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களின் பதிலுரைகளும் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், (27.08.2026) அன்று பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் மற்றும் சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. அதற்கு முன்பாக நடைபெற்ற கேள்வி நேரத்தில், மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் தொற்றுநோய் பரவல் குறித்து எழும் அச்சங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கேள்வி நேரத்தில் எழும்ப்பிய H1N1 காய்ச்சல் விவகாரம்
கேள்வி நேரத்தின் போது தொகுதி சார்ந்த கோரிக்கைகளுடன் சேர்த்து, பொதுமக்கள் நலன் சார்ந்த பல முக்கிய பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டன. அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மருத்துவத்துறை தொடர்பாக எழுப்பிய கேள்வி அவையின் கவனத்தை ஈர்த்தது.
அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது ‘H1N1’ எனப்படக்கூடிய பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று வழக்கத்திற்கு மாறாக வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்றின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு திட்டம் ஏதேனும் அரசின் பரிசீலனையில் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அளித்த பதில்
திமுக உறுப்பினரின் கேள்விக்கு விரிவான விளக்கமளித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், “மாநிலத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. நோய்த்தொற்று பரவல் நிலைமை தற்போது அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் நான்கு மாதங்களில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டில் மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் இதன் பரவல் சற்றே அதிகரித்து பதிவாகியுள்ளது. இருப்பினும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் மூலம் மாநிலம் முழுவதும் தொடர் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.பொதுவாக இந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பானது முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை எளிதில் தாக்கும் தன்மை கொண்டது என்பதால், பாதிப்பு நிலவரங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்படும் பட்சத்தில், அவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கான உரிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொாள்ளும்”* எனத் தெரிவித்தார்.
பருவமழைக்கு முன்பே பரவும் காய்ச்சல் – பின்னணி
பொதுவாகத் தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் காலங்களில்தான் காய்ச்சல் மற்றும் டெங்கு, H1N1 போன்ற பல்வேறு தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமான சுழற்சியாகும். ஆனால், நடப்பு ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக, பருவமழை காலத்திற்கு முன்பாகவே எதிர்பாராத விதமாக H1N1 பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று மாநிலத்தின் பல பகுதிகளில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. திடீர் காலநிலை மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் நிலையில், இச்சூழலை எதிர்கொள்ள சுகாதாரத்துறை அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு TET விலக்கு கிடைக்குமா? தமிழக அரசின் தீர்மானத்தால் அடுத்தகட்டம் என்ன?
