மரியாதை நிமித்தமாக மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
‘கேலோ இந்தியா’ போட்டிள் நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு தரும்படியும், நீட் தேர்வு தொடர்பாக கோரிக்கை விடுத்ததாகவும் பிரதமரை சந்தித்தபின் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாக மட்டுமே என்றும், அரசியல் ரீதியாக இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து, மகளிர் சுயஉதவிக் குழு தொடர்பாக தமிழகத்துக்கு தேவையான 5 கோரிக்கைகளை வைத்ததாக தெரிவித்தார். மேலும் மரியாதை நிமித்தமாக மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாகவும், நீட் தேர்வு தொடர்பாக தமிழக மக்களின் மனநிலையை பிரதமரிடம் தெரிவித்தாக கூறிய உதயநிதி, இது தொடர்பாக திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
மேலும் அடுத்த முறை ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு தரும்படியும், இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையில் அமைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.