நாட்டில் வருமானம் உயராத சூழலில் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், மாநகராட்சி சொத்து வரியை உயர்த்துவது சரியான நடவடிக்கை அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாற்றத்திற்கான நடைப்பயணப் பிரச்சாரம்
ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றி மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நாடு தழுவிய ‘நடைப்பயணப் பிரச்சார மக்கள் சந்திப்பு இயக்கம்’ நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பாரிமுனையில் நடைபெற்ற ‘மாற்றத்திற்கான நடைப்பயணத்தை’ கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செப்டம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்டமான பேரணி நடைபெறவுள்ளதைச் சுட்டிக்காட்டினார். நாடு தற்போது முதலாளித்துவ அமைப்பாக உள்ளதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ‘சோசலிச’ பாதையை நோக்கி நாடு நகர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்கள் நலன் சார்ந்த முக்கியக் கோரிக்கைகள்
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்,
- விலைவாசி உயர்வு & கூலி உயர்வு: ஒன்றிய அரசு உடனடியாக விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏழை எளிய மக்கள் மற்றும் மலைப் பகுதிகளில் பணியாற்றுவோரின் கூலியை உயர்த்த வேண்டும்.
- ரேஷன் பொருட்கள்: ரேஷன் பொருட்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு குறைக்கக் கூடாது; மாறாகத் தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும்.
- கல்வி மற்றும் மருத்துவம்: புற்றுநோய் ஈசல்கள் போலத் தனியார் மருத்துவமனைகள் பெருகுவதை அரசுகள் ஊக்குவிக்கின்றன. கல்வியையும் மருத்துவத்தையும் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளே நேரடியாகத் தன் பொறுப்பில் ஏற்று நடத்த வேண்டும்.
- சட்டப் பாதுகாப்பு: தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை ஒன்றிய அரசு சிதைப்பதை எதிர்த்துப் போராட வேண்டும்.
“நீட் தேர்வுப் பொய்மை உடைந்தது”
நீட் தேர்வு குறித்துப் பேசிய அவர், “நீட் தேர்வை தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளுமாகிய நாங்களும் ஏற்கவில்லை. தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்க வேண்டும். நீட் படித்தால்தான் சிறந்த மருத்துவர்கள் உருவாக முடியும் என்பது முற்றிலும் பொய்யான வாதம். உலகில் மிகச்சிறந்த விளங்கும் நமது அரசு மருத்துவர்கள் எந்த நீட் தேர்வை எழுதி வந்தார்கள்?” என வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
பொருளாதாரச் சீர்திருத்தம் & தொகுதி மறுவரையறை
நாட்டில் நிதிப் பற்றாக்குறை நிலவும் வேளையில், அரசு கஜானாவை விடத் தனியாரிடம் மூன்று மடங்கு அதிகமான நிதி குவிந்து கிடப்பதாகச் சுட்டிக்காட்டினார். 1939-ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தின் (Great Depression) போது அமெரிக்கா செய்தது போல, தனியாரிடமுள்ள நிதியை நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசு கையாளுமா என்றும் வினவினார். மேலும், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘தொகுதி மறுவரையறை’ தொடர்பான தனித் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஏகோபித்து ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
சொத்து வரி உயர்வு மற்றும் மாநில உறவுகள்
மாநகராட்சி சொத்து வரி உயர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “மக்களின் வருமானம் உயரவில்லை, ஆனால் விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது. இந்தச் சூழலில் சொத்து வரியை உயர்த்துவது நியாயமல்ல” என்றார். இறுதியாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வட்டாள் நாகராஜ் போன்றோரின் பேச்சுக்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், “கன்னட சலவளி தலைவர் வட்டாள் நாகராஜ் இரு மாநிலங்களுக்கு இடையே தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால், தமிழ் – கர்நாடக மாநிலங்களின் சகோதரத்துவ உறவை யாராலும் சீர்குலைக்க முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
