Homeசெய்திகள்தமிழ்நாடுமாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

-

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்தார். அப்போது மேட்டுர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வெள்ள நிலைமை குறித்தும், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி துவக்கப்பள்ளி நிவாரண முகாம் மற்றும் நாமக்கல் பள்ளிப்பாளையம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். அப்போது முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முகாம்களில் செய்து தரப்பட்டுள்ளது என்றும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், ஈரோடு , நாமக்கல், மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட ஆட்சியர்களிடம், முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, இந்த தண்ணீர் திறப்பின் காரணமாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.  காணொலி வாயிலான ஆய்வின்போது, கேரள மாநிலத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சமீரன், ஐஏஎஸ் அவர்களிடம் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கை விபரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிலிருந்து சென்ற மருத்துவக்குழு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினரின் பணிகள் குறித்தும், தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.ஆர். ராமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அமுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ