பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 311 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் புகைப்படம், சின்னம் பொருத்தப்பட்டுள்ள பேலட் இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வி.வி.பேட் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பொன்னேரியில் உள்ள மீன்வள கல்லூரியில் பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் பொன்னேரி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாகே சங்கேத் பல்வந்த் மற்றும் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டக அறை சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வருகின்றன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமரா, வெயிலில் இருந்து தற்காக்க சாமியானா பந்தல், தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.