தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மதுரையில் நடந்த தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் 27வது மாநில மாநாட்டில், ஜெகநாதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற்சங்க சட்டப்படி, தலைவர் ஜெகநாதன், சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கோபிநாத் ஆகியோரை பொதுச் செயலாளர்களாகவும், ஜெயபால், ஆறுமுகம் உள்பட 4 பேரை செயலாளர்களாகவும் நியமித்தார். இந்நிலையில், தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தலைவராக உள்ள ஜெகநாதன் தலைமையில் 32 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் சஞ்சீவரெட்டி, கடந்த செப்டம்பர் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
தற்காலிக குழு நியமன உத்தரவை எதிர்த்து, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், செயலாளர்கள் உள்பட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், தலைவரான ஜெகநாதன், தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எந்த விளக்கமும் கேட்காமல் தற்காலிக குழு நியமிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாகிகளிடம் எந்த விளக்கமும் கேட்காமல், குற்றப் பின்னணி கொண்டவர்களை தற்காலிக குழு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், சட்ட விதிகளின்படி, தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிகக் குழுவை நியமிக்க மத்திய குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போதைய நிர்வாகக் குழுவை கலைத்த பிறகே நியமிக்க முடியும் எனக் கூறி, தற்காலிக குழு நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி ஐ.என்.டி.யு.சி மத்திய குழுவுக்கும், தற்காலிக குழு தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.