கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட சமூக வலைதள பதிவில், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள திரவுபதி முர்மு, காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், கருரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். அரசியல் பேரணியின்போது நடந்த இச்சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரூரில் நடந்த அரசியல் பரப்புரையில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள ராகுல்காந்தி, காயம் அடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கரூரில் நடந்த அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்டநெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களை மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டுள்ளார்.