
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி சின்னத்துரையை நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். நேற்று காலை வரையில் 29 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அடுத்து 11 மணி நிலவரப்படி 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து தற்போது வரை 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 49 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி சின்னத்துரை கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே தாமோதரன், கண்ணுக்குட்டி, விஜயா ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான சின்னத்துரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


