முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 23 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள இந்த புதிய அமைச்சர்கள் பட்டியலின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சரவையில் தவெகவைச் சேர்ந்த 21 பேரும், கூட்டணி கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த 2 பேரும் இணைந்து மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, அவருடன் ஒன்பது அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றிருந்தனர். பின்னர் அவர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் நிர்வாக பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் அவசியமாகி இருந்தது.
இதற்காக கடந்த சில நாட்களாக முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். கூட்டணி அரசியல் சமநிலையை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கும் இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. விஸ்வநாதன் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். இதன்மூலம் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளது.
அமைச்சரவை பட்டியலில் பல மாவட்டங்களைச் சேர்ந்த புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியின் ஸ்ரீநாத், அவிநாசி தொகுதியின் கமலி, குமாரபாளையம் தொகுதியின் விஜயலட்சுமி, காஞ்சிபுரம் தொகுதியின் ரஞ்சித் குமார், கும்பகோணம் தொகுதியின் வினோத், திருவாடானை தொகுதியின் ராஜீவ், கடலூர் தொகுதியின் ராஜ்குமார் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் அரக்கோணம் தொகுதியின் காந்திராஜ், ஒட்டப்பிடாரம் தொகுதியின் மதன் ராஜா, ராஜபாளையம் தொகுதியின் ஜெகதீஷ்வரி, ஈரோடு கிழக்கு தொகுதியின் விஜய் பாலாஜி, ராசிபுரம் தொகுதியின் லோகேஷ் தமிழ்செல்வன், சேலம் தெற்கு தொகுதியின் விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் தொகுதியின் ரமேஷ் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
அதேபோல் வேளச்சேரி தொகுதியின் குமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் தென்னரசு, கோவை வடக்கு தொகுதியின் சம்பத்குமார், அறந்தாங்கி தொகுதியின் முகமது பர்வாஸ், தாம்பரம் தொகுதியின் சரத்குமார், ஆர்கே நகர் தொகுதியின் மரிய வில்சன் மற்றும் கிணத்துக்கடவு தொகுதியின் விக்னேஷ் ஆகியோருக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை மூலம் நிரப்பப்படாமல் இருந்த முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதால், அரசின் நிர்வாக செயல்பாடுகள் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், புதிய அமைச்சர்களுக்கு எந்த துறைகள் ஒதுக்கப்படுகின்றன என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
