பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மதுரை அருகேயுள்ள அழகர்கோவிலில் உலக பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடைசியாக கள்ளழகர் கோயிலுக்கு கடந்த 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அண்மையில் ரூ. 2 கோடி செலவில் ராஜகோபுர திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் கும்பாபிஷேக விழா தொடங்கியிருக்கிறது.

அதன்படி நேற்றி முன் தினம் கோயில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்றைய தினமும் 40 பட்டர்கள் இணைந்து, 8 யாக குண்டங்கள் வளர்த்து பூஜைகள் செய்தனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று ( நவ 23) நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் கோயிலுக்கு குவிந்து வருகின்றனர். காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்கு உள்ளாக மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அப்போது யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு ராஜகோபுர கும்பங்களில் புனித நீர் ஊற்றப்படுகிறது. பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.