விரைவு ரயிலில் வட இந்திய இளைஞர்களைத் தாக்கி, பிரதமர் குறித்து ஆபாசமாகப் பேசிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகிமைதாஸ் என்ற கூலித்தொழிலாளியை ரயில்வே காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
எக்ஸ்பிரஸ் ரயிலில் வட இந்திய இளைஞர்களைத் தாக்கி பிரதமர் மோடி குறித்து அவதூறாகப பேசிய நபர் விழுப்புரம் மாவட்டம் காணை கிராமத்தைச் சேர்ந்த (சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும்) கூலித் தொழிலாளியான மகிமைதாஸ் என்று ரயில்வே காவலர்களின் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து விழுப்புரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் அந்த ரயில் சென்னையிலிருந்து சென்ற வைகை விரைவு ரயிலாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், விருத்தாசலம் அருகே சென்றபோது தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும், எப்போது நடந்த சம்பவம் என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் ரயில்வே காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் மகிமைதாஸ் சென்ட்ரல் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாக, இந்தி பேசும் இளைஞர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153 a , 323 , 294 (b) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தாக்குதலில் ஈடுபடும் நபர் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் ரயில்வே காவலர்கள் தெரிவித்திருந்தனர்.


