தமிழ்நாட்டில் 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்- அமைச்சர் கணேசன்
தமிழ்நாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பெரிய மிளகு பாறை, இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நல துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இஎஸ்ஐ மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் சிகிச்சைகளும் தரப்படுகிறது என்றார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். வெளி மாநில தொழிலாளர்களையும் தமிழ்நாடு தொழிலாளர்கள் போல் பாவித்து தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார். பீகார் அரசு சார்பில் அனுப்பட்ட குழுவிடம், அம்மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என கூறி உள்ளனர். அதனை அந்த அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே வெளி மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.