தரமணியில் உள்ள திரைப பட நகரம் உரிய முறையில் விரைவில் புனரமைக்கபடும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மூதறிஞர் ராஜாஜியின் 50-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில் ராஜாஜியின் அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், “ராஜாஜியின் புகழ் அகில இந்திய அளவில் நிலைத்து நிற்கும். அதற்கு புகழ் சேர்க்கும் வகையில் தமிழக அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தரமணியில் உள்ள ஃபிலிம் சிட்டி கடந்த 10 ஆண்டு காலமாக பராமரிப்புகள் இன்றி உள்ளது, அதை பராமரிப்பதற்கான அரசாணை வெளியிடப்படும். இதற்காக முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதற்கான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திரைப்பட நகரை போலவே காந்தி மண்டபத்தையும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிதாக வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் சிலைகள் நிறுவப்பட உள்ளது. மேலும் அயோத்திதாசர் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. அரசுக்கு சொந்தமான அரங்குகளில் பொது நிகழ்ச்சிகளால் நடத்தும் போது சேதம் ஏற்படுமானால், நிகழ்ச்சி நடத்த பெறப்பட்ட முன்பணம் பிடித்தம்” எனக் கூறினார்.
