மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, மின் வாரியம் நவம்பர் 15 ஆம் தேதி துவங்கியது. ஆதார் எண்ணை இணைக்க வசதியாக, மின் வாரியத்தின் 2,811 பிரிவு அலுவலகங்களிலும், நவம்பர் 28ம் தேதி துவக்கப்பட சிறப்பு முகாம், இம்மாதம் 31ம் தேதி வரை செயல்பட உள்ளது. ஆதார் இணைப்புக்கு, எண் மட்டும் பதிவு செய்வதுபோன்ற எளிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
டிசம்பர் 31 ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என அறிவிப்பு வெளியிடப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
