செந்தில்பாலாஜி கைது- குற்ற விசாரணைகள் அல்ல: மு.க.ஸ்டாலின்
செந்தில்பாலாஜியை ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்? என ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளேடு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிக் கடிதம் எழுதியதில் தீவிரமடைந்தது. அவரைத் திரும்பப் பெற வைக்க நீங்கள் குடியரசுத் தலைவருக்கே கடிதம் எழுதினீர்கள். சட்ட ஆலோசனை பெற வேண்டி, தனது கடிதத்தை அவர் நிறுத்தி வைத்துள்ளார் என்றபோதிலும், தமிழ்நாடு அரசாங்கத்தில் அவர் எத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்? என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, ‘குஜராத் ஆளுநர் மாளிகை என்பது காங்கிரஸ் கட்சி அலுவலகம்’ என்று குற்றம் சாட்டினார்.
இன்றைய ஆளுநர் மாளிகைகள், பாஜக அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். ‘எனக்கு வேலையே இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்” என்றார்.
இதேபோல் செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின்போது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டீர்கள். அது ஏன்? தற்போது உச்சநீதிமன்றமே அவரைக் கைது செய்ததிலும், அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது.
இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல. இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களைச் சொல்ல முடியும். பாஜகவின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும். அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பாஜகவில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன. எனவேதான் இவர்களது கைதுகளைக் ‘குற்ற விசாரணைகள்’ என நாங்கள் பார்க்கவில்லை. ‘அரசியல் விசாரணைகள்’ ஆகத் தான் பார்க்கிறேன், அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில்பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.