spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு37 ஆயிரம் காவலர்களுக்கு பயன் அளிக்காத வெற்றுத் திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

37 ஆயிரம் காவலர்களுக்கு பயன் அளிக்காத வெற்றுத் திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

-

- Advertisement -

37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம் . வெற்றுத் திட்டம் எனவும், பிரிவு வாரியான ஆண்டு வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடுங்கள் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.37 ஆயிரம் காவலர்களுக்கு பயன் அளிக்காத வெற்றுத் திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்தாவது, ”காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்துக் காவலர்களும் பயனடையும் வகையில், பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அதற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக காவல்துறையின் இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேருபவர்களுக்கு பத்தாண்டுகளில்  முதல் நிலைக் காவலராகவும், அடுத்த ஐந்தாண்டுகளில் தலைமைக் காவலராகவும், அடுத்த பத்தாண்டுகளில் சிறப்பு சார் ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. காவலர்களாக பணியில் சேர்பவர்கள் சார் ஆய்வாளர்களாகக் கூட பதவி உயர்வு பெற முடியாத சூழல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் தான், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு 10 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலர், 13 ஆண்டுகளில் தலைமைக் காவலர், 23 ஆண்டுகளில் சிறப்பு சார் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

we-r-hiring

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பதவி உயர்வுக்காக கால வரம்பு குறைப்பு முதல்நிலைக் காவலர்கள் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், ஏற்கனவே தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது சரி செய்ய முடியாத அநீதி ஆகும். காவலர் பதவி உயர்வுக்கான கால வரம்பு குறைப்பு என்பதன் நோக்கமே அனைத்துக் காவலர்களும் அவர்கள் பணியில் சேர்ந்த 23-ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் சிறப்பு சார் ஆய்வாளராகவாவது பதவி உயர்வு பெற வேண்டும் என்பது தான். ஆனால், படிநிலைகளை ஏற்படுத்தி ஒரு தரப்பினருக்கு பதவி உயர்வை மறுப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.

2011-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன் இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்தவர்கள் இப்போது தலைமைக்காவலர் நிலைக்கு உயர்ந்திருப்பார்கள். அதேநேரத்தில் பத்தாண்டுகள் தலைமைக்காவலர்களாக பணி செய்தவர்கள் மட்டும் தான் சிறப்பு சார் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற முடியும் என்பதால் ஏற்கனவே தலைமைக்காவலர்களாக பதவி உயர்வு பெற முடியாது என அரசு கூறுகிறது. இது ஏற்க முடியாத வாதம்.  இது போன்ற சூழல்கள் ஏற்படும் போது, அதை சிறப்பு நேர்வாகக் கருதி 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த அனைவரும் இரு ஆண்டுகளுக்கு முன்பே தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்றதாகக் கருதி, அதனடிப்படையில் சிறப்பு சார் ஆய்வாளர் பதவி உயர்வும் வழங்கப்படுவது தான் சரியானதாக இருக்கும். அப்போது தான் காவலர் பதவி உயர்வுக்கான கால வரம்பு குறைப்பு அனைவருக்கும் பயனளிப்பதாக அமையும். மாறாக, பெரும்பான்மையினருக்கு பயனளிக்காத திட்டங்கள் தேவையற்றவை.

தமிழக அரசு அறிவித்திருக்கும் காவலர் பதவி உயர்வுக்கான கால வரம்பு குறைப்பு திட்டத்தின்படி, சுமார் ஒரு லட்சம் காவலர்களைக் கொண்ட தமிழகக் காவல்துறையில் வெறும் 8533 பேர் மட்டும் தான் பயனடைவார்கள். 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 8,000 பேர்,  2010 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 4000 பேர், 2009 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 8500 பேர்,  2008 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 3500 பேர், 2006 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 1500 பேர்,  2003 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 8500 பேர், 2002 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 3500 பேர் என மொத்தம் 37,500 காவலர்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் கிடைக்காது. அப்படியானால் இப்படி ஒரு திட்டத்தை ஏன் செயல்படுத்த வேண்டும் என்ற வினா எழுவதை தவிர்க்கவே முடியாது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்பவர்களுக்கு அடுத்த 7 ஆண்டுகளில் முதல் நிலைக் காவலர்களாகவும், பத்தாண்டுகளில் தலைமைக் காவலர்களாகவும், 20 ஆண்டுகளில் சிறப்பு சார் ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும் (வாக்குறுதி எண்:389) என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, காவல் ஆணையத்தை அமைத்து அதன் அறிக்கையை பெறுவதற்காக 4 ஆண்டுகள் காலம் கடத்தியது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் கூட, திமுகவின் வாக்குறுதியை விட 3 ஆண்டுகள் குறைவான பயன் அளிப்பதாகவே உள்ளது; அதுவும் கூட சுமார் 37,500 பேருக்கு எந்த பயனும் அளிக்காததாக உள்ளது. மொத்தத்தில் இது வெற்றுத் திட்டம்.

தமிழ்நாட்டில் காவலர் பணி என்பது மிகவும் கடினமானது; நன்றியில்லாதது. காவலர்களாக பணியில் சேருபவர்கள் நேரம் காலம் இல்லாமல், விடுமுறை இல்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். அவ்வாறு உழைத்தாலும் பொதுமக்களில் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரை அனைவரிடமும் அவப்பெயரைத் தான்  வாங்க வேண்டியிருக்கும். அத்துடன் இல்லாமல், காவலர்களாக பணியில் சேரும் அவர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற முடியாமல் காவலர்களாகவே தான் ஓய்வு பெற வேண்டியிருக்கும். சிறப்பு சார் ஆய்வாளர் என்பது கூட அதிகாரி பதவி கிடையாது. அதுவும் காவலர் நிலைக்கு ஒப்பானது தான். அந்த பதவி உயர்வை வழங்குவதில் கூட தமிழக அரசு தேவையற்ற பாகுபாடு காட்டக்கூடாது.

எனவே, காவலர் பதவி உயர்வுக்கான கால வரம்பு குறைப்பு திட்டத்தை அனைவருக்கும் பயனளிக்கும்படி மாற்ற வேண்டும். 2002 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டத்தின்டியான தலைமைக்காவலர் பதவி உயர்வை இரு ஆண்டுகள் பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் அக்காலத்தில் பணியில் சேர்ந்த 37,500 பேருக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளாா்.

மக்கள் மகிழ்ச்சி…. புலம்பும் எடப்பாடி பழனிசாமி.. நினைப்பு எல்லாம் பெட்டியில்தான்: முதல்வர்

MUST READ