அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இறந்ததால் அவர்களது குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலக தமிழர் தினம் 2023 விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று அயலக தமிழர் விழாவில் சிறப்புரையாற்றினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொன்முடி, சேகர்பாபு, தலைமைச்செயலாளர் இறையன்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் அயலக தமிழர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அயலக தமிழர்கள் சிரமத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகும் நிலை ஒரு சில இடங்களில் இன்னும் இருக்கிறது. எனவே தான் கலைஞர் ஆட்சி காலத்தில், அயலக தமிழர் நலத்துறையை உருவாக்கினார். அயல் நாடுகளில் இறந்த தமிழர்களின் உடல்களை திரும்ப பெறுதல், அவர்களுக்கான நிலுவை தொகையை பெறுதல், மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் பணியிழந்த ஏராளமான தமிழர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டு இங்கு சிறு குறு நடுத்தர தொழில் தொடங்க கடன் உதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. உக்ரைன் போரினால் அங்கு சிக்கிய தமிழ்நாடு சேர்ந்த மாணவர்களை அரசு முயற்சியினால் பத்திரமாக அழைத்து வரப்பட்டது.
புலம்பெயர் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரவுகள் ஆவணப்படுத்தப்படும். புலம்பெயர் தமிழர்களில் ஆண்டுக்கு 200 மாணவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு பண்பாட்டு சுற்றுலா வர ஏற்பாடு செய்யப்படும். அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத்தளம் ஏற்படுத்தப்படும். அயல்நாடுகளில் பணிபுரியும் போது இறந்தால் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.
