ஆளுநர் ரவி ஒரு கட்சி சார்புடன் செயல்படுவதால் தீர்மானம்- முதலமைச்சர்
ஆளுநர் செயல்பாடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தின்மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2-வது முறையாக ஆளுநர் தொடர்பான தீர்மானம் கொண்டுவரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்படுவதால் அவருக்கு எதிராக 2வது முறையான தீர்மானம் முன்மொழிய சூழல். இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும், அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணா கூறினார். அதனை கலைஞர் வழிமொழிந்தார்.
எனினும் ஆளுநர் பதவிக்கு உரிய மரியாதையை அண்ணாவும், கலைஞரும் கொடுக்கத் தவறியதில்லை. அண்ணாவின் கருத்தை வழிமொழிந்தாலும் ஆளுநர் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதை அளித்துவந்தார். ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கீடாதவராக இருக்க வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஒருதலைப்பட்சம், கட்சி சார்பின்றி நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுபவராக ஆளுநர் இருக்க வேண்டும் என அனுமந்தையா ஆணையம் கூறியது.
ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் தவிர அரசியல் கட்சிக்கு அல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் விரும்பத்தகாத நிகழ்வு வருத்தமளிக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும் மக்களுக்கும் வழிகாட்டுபவராக ஆளுநராக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நண்பராக இருக்க தயாராக இல்லை.
ஆளுநர் பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியானது அல்ல. ஆளுநர் என்பதைத் தாண்டி அரசியல்வாதியாக செயல்படுகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை பொதுவெளியில் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் ஆளுநர். பிரதமர் இங்கு வரும்போதோ, நான் பிரதமரைச் சந்திக்கச் செல்லும்போதோ, அரசுக்கு எதிராக பேசுவதை ஆளுநர் வழக்கமாக கொண்டிருக்கிறார். மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிக்கப்பட்டது என அர்த்தம் என ஆளுநர் பேசுகிறார்” எனக் கூறினார்.