கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், த/பெ.செல்வராஜ் (வயது 14), திரு.ராகுல்கண்ணன், து/பெ.இசக்கியப்பன் (வயது 14) மற்றும் முகேஷ், த/பெ.மகாலிங்கம் (வயது 13) ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் நேற்று (15-8-2023) கடற்கரைக்கு குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.