ஆளுநர் ரவி தனது வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் வீரபாண்டியன், பெரியசாமி உள்ளிட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், “பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை 22 சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம். 22 சதவீதம் வரை நெற்பயிர்களை கொள்முதல் செய்திருக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை தயாராக இருக்கும் நிலையில், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 22% ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், காலதாமதமாக 20% வரையே கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் உறுப்பினருமான பா.மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா மார்ச் 4 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு பொருந்தும். காரல் மார்க்ஸ் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28ஆம் தேதி போராட்டம் நடைபெறும். ஆளுநர் ரவி தனது வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும்.
அதிமுக தீர்ப்பு, யாருக்கு சாமர்த்தியமோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அது அவர்கள் பிரச்சனை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, நாளைக்கு பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார். இரண்டு பேரையும் வெற்றி பெற வைப்பது மோடி மட்டுமே. முன்பு சசிகலாவிடம் சரணாகதி அடைந்தவர் பின்பு மோடியிடம் சரணாகதி அடைந்தார். சரணாகதியில் தேர்ந்த மனிதர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சித்தார்.
