ஆளுநர் ரவி அரசியல் சூதாட்டத்தை நடத்திவருகிறார்- முத்தரசன்
தமிழகத்தில் ஆளுநர் ரவி ஒரு அரசியல் சூதாட்டத்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே 40க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு தடை மசோதாவை கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆளுநர் அதனை அலட்சியப்படுத்துகிறார். ஆன்லைன் ரம்மி நிறுவனங்களோடு ஆளுநர் உரையாடுகிறார். ஆனால் அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளதும் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ஒரு அரசியல் கட்சி அல்லது அமைப்பை நடத்துவது போல தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். மக்களின் உயிரோடு ஆளுநர் விளையாடுகிறார். எனவே தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தை நாட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


