பென்ஷன் மற்றும் பிற பலன்களை வழங்கக் கோரிய இளையாங்குடி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், இளையாங்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜகண்ணப்பன், 2009 ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.
அதனால், 2009 ம் ஆண்டு இளையாங்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட மதியரசன் வெற்றி பெற்று, 2011 ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இந்நிலையில், 2009 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த தனக்கு, பென்ஷன் மற்றும் பிற பண பலன்களை வழங்கக் கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பென்ஷன் வழங்கக் கோரி 2020ம் ஆண்டு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பென்ஷன் மற்றும் பிற பணப்பலன்கள் வழங்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. அளித்த விண்ணப்பத்தை ஆறு வாரங்களில் பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
கெத்து காட்டும் ஹரிஷ் கல்யாண்… புதிய பட டைட்டில் அறிவிப்பு… வைரலாகும் ப்ரோமோ!


