எஸ்.ஐ.ஆர் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ள அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனா்.
இதுகுறித்து, செய்தியாள்கள் சந்திப்பின் போது, “எஸ் ஐ ஆர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைபடியே எஸ் ஐ ஆர் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு அதையே வலியுறுத்துகிறோம். வாக்காளர் பட்டியல் முழுவதுமாக சரிபார்க்கப்பட வேண்டும் முழுவதுமாக திருத்தப்பட வேண்டும். பழைய வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்கள் உள்ளிட்டவருடைய பெயர் நீக்கப்படவில்லை அது அனைத்தும் நீக்கப்பட வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் குடியிருப்பு இல்லாத 32 ஆயிரம் வாக்காளர்கள் அந்த பட்டியலில் இருந்தார்கள் அது தொடர்பாக ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தோம் ஆனால் அவர்களுடைய பெயர்கள் நீக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதத்தில் வந்த வாக்காளர் பட்டியலில் கூட முறைகேடாக அந்த 32 ஆயிரம் பெயர்கள் இடம் பெற்றிருந்தன அவர்களை நீக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தான். கடந்த முறை கூட திருட்டு வாக்கு செலுத்திய ஒரு வாக்காளரை பிடித்துக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர சம்பந்தப்பட்ட அந்த போலி வாக்கு செலுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போலி வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள் இருக்கக்கூடாது.

அதே வேளையில் எந்த ஒரு நியாயமான வாக்காளர்களுக்கும் வாக்கு பறிபோய்விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறோம். எனவேதான் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை அ.தி.மு.க வரவேற்கிறது.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை ஏன் திமுக எதிர்க்கிறது? போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தும் போது அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார்? அவருக்கு ஏன் அச்சம்? மடியில் கனமில்லை அதனால் பயமில்லை என்று கூறும் ஸ்டாலின் ஏன் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டு பயப்படுகிறார்? எஸ் ஐ ஆர் நடவடிக்கையைக் கண்டு ஸ்டாலின் ஏன் அச்சப்படுகிறார்? தற்பொழுது எஸ் ஐ ஆர் பணிகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறதா? என்று கேட்டால் அது மிகப் பெரிய சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி இந்த விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஒரு மாவட்டத்துக்கு தேர்தல் அதிகாரியாக இருக்கக்கூடியவர் அந்த மாவட்டத்தின் ஆட்சியர். ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் தி.மு.க நிர்வாகி போன்று செயல்படுகிறார். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை முழுமையாக எதிர்த்த தி.மு.க தற்போது களத்தில் BLO வசமுள்ள படிவங்களை மொத்தமாக அள்ளி சென்று மிரட்டி அவர்களாகவே நிரப்புகிறார்கள். குடிபெயர்ந்த வாக்காளர்கள் எந்த பகுதியில் குடியிருக்கிறார்களோ அந்த பகுதியில் மட்டும் தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும் அவர்களுடைய வாக்குரிமை அந்த பகுதியில் தான் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். SIR விண்ணப்ப படிவங்களை திமுகவினரே நிரப்பி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக சி.வி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேலும், தமிழக வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் யார் யார் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதை தி.மு.க.வினரே முடிவு செய்கிறார்கள் . தேர்தல் ஆணையத்தின் அத்தனை அதிகாரங்களையும், அவர்களே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள் என்றும் எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பும் விவகாரத்தில் சென்னை மாநகராட்சியில் மிகப்பெரும் அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று வருகிறது“ என்றும் சிவி சண்முகம் கூறியுள்ளாா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவிற்கு முன்மாதிரி தமிழ்நாடு – உதயநிதி பெருமிதம்!


