தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவில் நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு நான்கு புதிய சட்டத் தொகுப்புகளை மோடி அரசாங்கம் 2019ல் கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் போராடியதன் காரணமாக அவற்றை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்தது. இப்போது பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதன் உற்சாகத்தில் அந்த நான்கு சட்டத் தொகுப்புகளையும் நடைமுறைப்படுத்துவதாக மோடி அரசு அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் நீண்ட நெடிய போராட்டங்களின் விளைபொருளாக வந்தவை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்திய தொழிலாளர் வர்க்கம் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தித் தமக்குப் பாதுகாப்பான சட்டங்களை உருவாக்கச் செய்தது. இதில் எண்ணற்ற தியாகங்களை தொழிலாளர்கள் செய்துள்ளனர். அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் மெத்தனம் காட்டி இருந்தாலும்கூட, தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராடுவதற்கும், தமது உரிமைகளைப் பெறுவதற்கும் அந்த சட்டங்களே அடித்தளமாக இருந்தன. அவை எல்லாவற்றையும் இப்போது மோடி அரசு ஒழித்துக் கட்டி விட்டது.
தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்காக கோடிக்கணக்கான மக்களின் நலன்களை தாரை வார்க்கத் தயங்காத மோடி அரசாங்கம், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களை ரத்து செய்துவிட்டு முதலாளிகளுக்கு ஆதரவான சட்டத் தொகுப்புகளை இப்பொழுது நடைமுறைப்படுத்துகிறது. பெண் தொழிலாளர்களை இரவு நேரப் பணிகளிலும், கடுமையான பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது என ஏற்கனவே இருந்த தொழிலாளர் சட்டங்களில் பாதுகாப்பு இருந்தது. இப்போது அவற்றை மோடி அரசு நீக்கிவிட்டது. இனிமேல் பெண் தொழிலாளர்களை இரவுப் பணிகளிலும், உயிருக்கு ஆபத்தான பணிகளிலும் ஈடுபடுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அறிவித்துவிட்டது.
மோடி அரசு புதிதாக இயற்றியிருக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் எல்லாவிதமான பணிகளையும் ஒப்பந்தப் பணிகளாக மாற்றுவதற்கு இடமளிக்கிறது. நிரந்தரப் பணிகளே இனிமேல் இருக்காது என்ற நிலையை உருவாக்குகிறது. இது இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது.
எனவே, மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்துகிறோம். மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, பாசிச நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பரந்துபட்ட மக்கள் போராட்டங்கள் மட்டுமே உதவும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். அதற்கு அனைத்து சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
பாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா? -சீமான் கேள்வி


