ஈஷா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையம் சென்ற தனது மகள்களை காணவில்லை என கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவை ஈஷா மையத்திற்குச் சென்ற பலர் காணவில்லை ; காவல்துறையால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஈஷா மைய வளாகத்தில் சட்டவிரோதமாக தகன மேடை செயல்படுகிறது என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும், ஈஷா மையத்தில் உள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து மாத்திரைகளை வழங்கப்படுவதாகவும், காவல்துறை பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா மையம் தரப்பில், தமிழக அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கையில் அந்த 2 பெண்களும் தங்கள் விருப்பத்தின்படியே ஈஷா மையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்கள் தங்கள் தந்தை மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் வெளிநாட்டு பக்கதர்களுன் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது, அதிலும் ஈஷா மையத்துக்கு எதிராக எந்த விசயமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில், ஈஷா விவகாரத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதனை விசாரணை செய்ய தடை விதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலுவை வழக்குகள் மீதான புலன் விசாரணை என்பது சட்டப்படி அரசு மேற்கொள்ள எந்த தடையையும் விதிக்கவில்லை என்றும், மாறாக இந்த வழக்கு என்பது ஆட்கொணர்வு மனு தொடர்பானது, ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பானதே என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், 2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து தங்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை. வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கிடாக இருக்காது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.