spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம் - அன்புமணி

15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம் – அன்புமணி

-

- Advertisement -

15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம் – அன்புமணி
ஈகியர்களுக்கு வீர வணக்கம், 15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம், எந்த ஈகத்திற்கும் தயாராவோம் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மடல் எழுதியுள்ளாா்.15% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே நம் லட்சியம் - அன்புமணி
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாபெரும் ஈகம் நிகழ்த்தப்பட்டு வரும் 17 ஆம் நாளுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சமூகநீதி நாளாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இந்த நாள் தான் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்ய நம்மைத் தயார்படுத்தும் நாளாகும். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை 2% உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதற்காகத் தான் 1980 ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார்கள். அதன் பின் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக எதுவும் நடக்காத நிலையில் தான், 1987 ஆம் ஆண்டில் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர் அய்யா அறிவித்தார்.

அதன்படி, 38 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 17ஆம் நாள் தொடங்கிய ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தில் தான் பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம்,  சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன்,  பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் மார்பில்  துப்பாக்கிக் குண்டுகளையும், உடல் முழுவதும் காவல்துறை தடியடிகளையும் வாங்கிக் கொண்டு தங்களின் இன்னுயிரை சமூகநீதிக்காக தியாகம் செய்தனர். அவர்களின் ஈகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.

we-r-hiring

அவர்கள் செய்த தியாகங்களுக்கும், சமூகநீதிப் போராட்டத்தின் போது நாம் எதிர்கொண்ட மிகக்கொடிய அடக்குமுறைகளுக்கும் உரிய பயன் கிடைத்ததா? என்றால் அது தான் இல்லை. எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்து நாம் நடத்தியப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில் மருத்துவர் அய்யா அவர்களை அழைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அதனால் வன்னியர்களுக்கு பெரிய அளவில் பயன்கிடைக்கவில்லை. அவர்களின் சமூகநிலை கிட்டத்தட்ட அப்படியே தான் தொடர்கிறது.

அதனால் தான் கடந்த அதிமுக ஆட்சியில் மீண்டும் ஒரு சமூகநீதிப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை பெற்றோம். சமூகநீதிக்கு எதிரான சதியாளர்கள் தொடர்ந்த வழக்கால் அந்த இட ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட போதிலும், வன்னியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்து கொண்ட உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022 ஆம் நாள் தீர்ப்பளித்தது. அது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்பதில் ஐயமில்லை.

ஆனால், அதன்பின் இன்றுடன் 1263 நாள்களாகிவிட்ட நிலையில் இன்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமலும், வன்னியர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்காமலும் சமூகநீதி சூறையாடலை நடத்தி வருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. நாம் நினைத்திருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான நாள் முதலாகவே மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி சில ஆண்டுகளுக்கு முன்பே வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால்,  வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி சமூகநீதி வழங்கும் என்று எதிர்பார்த்தோம்; ஏமாற்றமடைந்தோம்.

திமுக அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஓரிரு மாதங்களிலேயே வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி, 2022-23 ஆம்  கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய திமுக அரசு தவறியதால் கடந்த 4 ஆண்டுகளில் 3600 எம்.பி.பி.எஸ் இடங்களையும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் வன்னிய மாணவர்கள் இழந்திருக்கின்றனர். அதேபோல், நமக்குக் கிடைத்திருக்க  வேண்டிய அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6000-க்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80,000-க்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் 1000-க்கும் கூடுதலான இடங்களும் பறிபோயிருக்கின்றன. மேலும் அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளையும் வன்னியர்கள் இழந்திருக்கின்றனர். வன்னியர்களுக்கு எதிரான இவ்வளவு பெரிய சமூகநீதி துரோகத்தை செய்தது திராவிட மாடல் அரசு தான்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாள் முதல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து வந்த திமுக அரசு, இப்போது சாதிவாரி மக்கள்தொகை விவரம் இல்லாததால் தான் இடஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்று கூறுகிறது. வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை விவரங்களைத் திரட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறவில்லை. ஒருவேளை மக்கள்தொகை விவரங்கள் தேவை என்றாலும் கூட அதை சேகரிப்பது தான் தமிழக அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கடமை ஆகும். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க போதிய சாதிவாரி விவரங்கள் இல்லாத நிலையில், அதற்காக அமைக்கப்பட்டிருந்த நீதியரசர் நாகமோகன்தாஸ் ஆணையம் 63 நாள்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 165 நாள்களில் ஒட்டுமொத்த அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், வன்னியர்  இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 976 நாள்களாக எந்தப் பணியையும் செய்யாமல் காலநீட்டிப்புகளை மட்டும் வாங்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டிய கடமையிலிருந்து தவறிய திமுக அரசுக்கு அதிகாரத்தில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. அந்த சமூக அநீதி அரசு அகற்றப்படுவதை வரும் தேர்தலில் வன்னிய மக்கள் உறுதி செய்வார்கள். நமக்கான உரிமைகள் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. கடுமையான போராட்டங்களின் வாயிலாகவும், எண்ணற்ற தியாகங்களைச் செய்தும் தான் உரிமைகளை வென்றெடுத்திருக்கிறோம். இன்றைய நிலையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி தான்; 15% இட  ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக  சிறைகளை நிரப்புவது உள்ளிட்ட எத்தகைய அறப்போராட்டங்களையும், தியாகங்களையும் செய்யத் தயாராகவே  இருக்கிறோம். சமூகநீதிப் பயணத்தில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் 21 ஈகியர்களின் நினைவு நாளில், நமக்கான சமூகநீதிப் போராட்டப் பயணத்தை அவர்களின் வாழ்த்துகளுடன் தொடருவோம்.

அத்துடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்; அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மடல் எழுதியுள்ளாா்.

இரிடியம் மோசடி புகார்… சேலம் வழக்கிலிருந்து வெளிவந்த மெக மோசடி கும்பல்…

 

MUST READ