தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியைச் சார்ந்தவர் வசந்த கண்ணன் இவர் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜெயபிரபா இவர் தனது குழந்தைகளுடன் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வசந்த கண்ணன் அவரது சம்பந்தப்பட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் சிறைத்துறை அதிகாரியின் மனைவி தங்கியுள்ள அவரது தந்தை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திடீரென இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


