2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த பாசிச பாஜக அரசோடு நாங்கள் எப்போதும் ஒத்துபோக மாட்டோம். குறிப்பாக திமுக போல பாஜக உடன் மறைமுக உறவுக்கார்களாக இருக்க மாட்டோம். மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா-னு சொல்லிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துட்டு, பாஜக உடன் பொருந்தாத கூட்டணிய அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி-னு சொல்லிட்டு இருக்காங்களே அவங்கள மாதிரி நாம இருக்க மாட்டோம்.
பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துவிட்டார்கள்? நீட் ஓழித்து விட்டார்களா? தமிழகத்திற்கு செய்ய வேண்டிய உதவிகள் செய்து கொடுத்தார்களா? கல்வி நிதி ஒதுக்கிவிட்டார்களா? அப்புறம் எதற்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர். சரி அவர்கள் கூட்டு, பொரியல், அப்பளம் என ஏதாவது கிளறிக்கொள்ளட்டும்.
அதிமுக – பாஜக கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதேநேரம் திமுக குடும்பம் பாஜக உடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அடுத்த தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு போடும் வாக்குதான் ஆகவே யோசித்து ஜாக்கிரதையாக செயல்படுங்கள் மக்களே. திமுக – பாஜக மறைமுக உறவு.
2026-ல் தவெக VS திமுக தான். இதில் மாபெரும் சக்திகொண்ட எளியோரின் குரலாய் களத்தில் இருக்கும் தவெக. இன்னொன்று கொள்கை என்கிற பெயரில் தமிழ்நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் திமுக. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தான் 2026ல் போட்டியே. மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக வேண்டுமா? அல்லது உண்மையான மக்களாட்சியை கொடுக்கப்போகும் தவெக இப்போ ஆட்சியக்கனுமா?
நண்பா… நண்பீஸ்… தோழா… தோழி… என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா? என்னை இவ்வளவு நம்புகிறீர்களா? சரி ஒரு கை பார்த்துவிடலாம். நான் கூட ஓரிரு வாரங்களுக்கு முன்பு என்னமோ ஏதோவென நினைத்தேன். ஆனால் பார்த்துவிடலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.