திருவேற்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவேற்காடு பகுதியில் கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் வருவாய் கோட்டாட்ச்சியர் காஞ்சனா தலைமையில் அதிகாரிகள் குழு பொக்லைன் இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர். கோலடி செந்தமிழ் நகரில் ஆக்கிரமிப்பு குடியிருப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தபோது, அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பல ஆண்டு காலமாக வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என அப்பகுதிமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்தை அடுத்து 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனால் கோலடியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.