நெல்லை பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் இரவில் மாணவியை தொடர்பு கொண்டு மதுகுடிக்க அழைத்த புகாரில் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி சமூகவியல் துறையில் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின் (40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ்(40) ஆகியோர் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 4ம் தேதி இரவில் நெல்லை மாநகர பகுதியில் விடுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது போதை அதிகமாகவே, நள்ளிரவில் தனது துறையில் படிக்கும் மாணவி ஒருவருக்கு போன் செய்து பால்ராஜ் ஆபாசமாக பேசியுள்ளார். பின்னர் ஜெபஸ்டின் மது குடிக்க வருமாறு அழைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதன் பேரில் பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 5-ந்தேதி புகார் அளித்தனர். பின்னர் தங்களது மகளின் படிப்பு பாதிக்கப்படும் என புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிகொண்டுள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரியவரவே, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்திட ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர காவல் ஆணையர் ரூபேஸ் கமார் மீனா மேற்கொண்ட விசாரணையில் பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது உறுதியானது. இதையடுத்து நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் தூத்துக்குடியில் இருந்த ஜெபஸ்டினை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பேராசிரியர் பால்ராஜ் தேடி வருகின்றனர்.