வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி- தவிக்கும் மக்கள்
புதுச்சேரி ஆட்சிப் பகுதியான மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
புதுச்சேரி பிராந்தியம் மாஹே கேரள மாநிலம் கண்ணூர் பக்கத்தில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாஹே, பந்தக்கல், பள்ளூர் மூன்று பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தீயணைப்புத்துறையினர், போலீஸார் கூட்டாக மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர்.


மழை தொடர்ந்து பெய்வதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கடுத்து ஓடுகிறது. இதனால் வாகனம் செல்வதில் சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால், பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று அறிவித்துள்ளனர். போன் செய்தால் மீட்டு செல்வதாக மண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது. மூன்று குழுக்களாக அரசு பணியாளர்கள் பிரிக்கப்பட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையால் மாஹேயில் இரண்டாம் நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.